JUNE 10th - JULY 10th
வீஜேவைப் பற்றி அலுவகத்தில் தெரிந்தவர்களுக்கு அவர் பெர்சனல் வாழ்க்கை பற்றி அறிந்து கொள்ள அவர் ஒருபோதும் வாய்ப்பளித்தில்லை.
எவ்வளவு நாகரீகம் உள்ளவர்களானாலும் உடன் பணிபுரிபவர்களைப் பற்றி குறைந்தபட்ச விபரங்களை கேட்காதிருப்பது கடினம்.
ஆனால் வீஜே மட்டும் மிகவும் சாதாரண விஷயமான திருமானமானவரா என்ற கேள்விக்கு கூட, நான் பெர்சனல் கேள்விகளை ஊக்குவிப்பதில்லை என்று கூறிவிடுவார் கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல். அதனால் கூட யாருக்கும் இந்த மாதிரி ஒரு சந்தேகம் வருவது மிக அரிது.
தோற்றத்திலாகட்டும், பழகுவதிலாகட்டும் விரும்பத்தக்க பர்சனாலிட்டியாக அறியப்படுபவர்.
தேர்ந்த படிப்பும், தெளிவான பேச்சும், செயலும், நல்ல குடும்பப் பின்னணியும் கொண்ட ஒருவர் காதலித்தும் இன்னும் கல்யாணம் செய்துகொள்ளாமலிருப்பதின் காரணம் தெரிந்துகொள்ள ஆர்வம் தோன்றுவது சகஜம் தானே.
அதை நான் தெரிந்துகொண்டதே எதிர்பாராத விதமாகத்தான். ஆனாலும், அதை நான் பிறருக்கு சொல்லாதது ஒரு குறைந்த பட்ச நாகரீகம் கருதி.
இன்னும் சிலரும் இதேபோல இருக்கக்கூடும் என்பதே பெரும்பாலானோருக்கு இது ரகசியமாகவே இருப்பதின் காரணம்.
இதை வீஜேயின் கதை என்பதை விட அந்த பெண்ணைப் பற்றிய கதை என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.
வீஜே தன் பட்ட மேற்படிப்பின் போது காதலித்த அந்த பெண் மகி அவருக்குமே ஆச்சர்யமாளிப்பவராகவே இருந்திருக்கக் கூடும்.
ஹே! மகி, நான் உன்கிட்ட ஒண்ணு சொல்லணும் என்றான் அர்ஜூன்.
அந்த குரூப்பில் கலகலப்புக்கு பெயர் போனவன் என்பதால், எல்லாரும் திரும்பி அவனைப் பார்த்தனர்.
என்ன என்று மகி கேட்ட மாத்திரத்தில் அவள் முகத்தைப் நேரே பார்த்து, ஐ லவ் யு! என்றான் அர்ஜூன்.
ஒரு நிமிடம் ஆச்சர்யத்தில் உறைந்தாள் மகி.
ஹே! என்ன பதில் சொல்லு, என்று மீண்டும் அவளை கேட்டான் அர்ஜூன்.
அவள் சுதாரித்துக் கொண்டு, தேங்க் யூ! என்று சிரித்தாள்.
அவ்வளவுதான்! அர்ஜூன் வெடித்து சிரித்தான்.
அதானே, நீயாவது என் பிராங்குக்கு சிக்குறதாவது என்றான்.
எல்லாரும் அதிர்ந்து திரும்பி அவனை முறைத்தார்கள்.
அவன் சொன்னதை உண்மை என்று நம்பி வேறு ஏதாவது பதில் சொல்லியிருந்தால் எவ்வளவு தர்மசங்கடமாகப் போயிருக்கும் என்ற உணர்வில்.
எல்லாத்தையும் லைட்டா எடுத்துக்க பழகிக்கணும் மகியைப்போல என்று சிரித்தான் அர்ஜூன்.
திடீரென்று ஒரு மின்னல் வெட்டியது போல, ஐ லவ் வீஜே! என்றாள் மகி.
ஓ! என்று எல்லாரும் ஒரே குரலில் கோஷமிட்டார்கள்.
எப்படி நீ எல்லார் முன்னாடியும் இப்படி ஓபனா ப்ரபோஸ் பண்ணிட்ட, என்றான் வைத்தி.
ஏன், அதனால் என்ன? என்றாள் மகி.
பதில் எப்படி இருக்கும் என்று தெரியாதபோது இந்த விஷயத்தை பப்ளிக்கா சொல்வது சரியா? என்றாள் கீர்த்தி.
பதில் என்னவாக இருந்தாலும், இது என்னோட உண்மையான ஃபீலிங்க் தானே, அதைத்தான் சொன்னேன், என்றாள்.
தான் கேட்டது நிஜமா என்ற குழப்பத்தில் கேள்விக்குறியுடன் மகியைப் பார்த்தான் வீஜே.
ஆனால், அவள் பதில் எதிர்பார்க்காத பாவனையில் புன்னகையுடன் தோளைக் குலுக்கினாள்.
அந்த நிமிடம், வீஜே அவளைப் புதிதாய்ப் பார்த்தான், அழகாய் தெரிந்தாள்.
எப்போது வீஜே மகிக்கு எஸ் சொன்னான், எப்போது அவர்கள் இருவரும் நெருக்கமானார்கள் என்பது மற்ற யாருக்குமே நிச்சயமாக தெரியவில்லை.
அவர்கள் காதலை, ஜோடியை எல்லாருக்குமே பிடித்திருந்தது.
படிப்பு முடியும் நேரம் வீஜே அவர்கள் திருமணம் குறித்து பேச வேண்டும் என்று சொன்னபோது, ஆழமான யோசனையுடன் கரீயரில் செட்டிலாயிட்டுதான் அதைப்பற்றி சரியா திட்டமிட முடியும் என்று அவள் சொன்னது சரியாகவே பட்டது வீஜேவிற்கு.
இருவரும் தத்தம் துறையில் தீவிரமாக வேலையில் செட்டில் ஆகிற முனைப்புடன் இருந்தபோதும், தொடர்ந்து தொடர்பில் இருந்தார்கள்.
வீஜேயின் வீட்டிலும், இவர்கள் இருவரைப் பற்றிய சந்தேகம் இல்லாமலில்லை.
அவர்களுக்கு வீஜேயின் மீதிருந்த நம்பிக்கையால் இந்த விஷயத்தில் எந்த தடையும் இருக்கவில்லை. அதனால் அதைப் பற்றி நேரடியாக கேட்காத போதும், அவர்கள் இருவரும் பேசுவதை குறுகுறுப்புடன் ரசித்தார்கள்.
தன் இலக்கில் குறியாக இருந்த மகி வேலை நிமித்தமாக சீக்கிரமே வெளிநாடு புறப்பட்டார்.
மகியை வழியனுப்ப வீஜே முன்கூட்டியே லீவு எடுத்து நேரில் சந்திக்கச் சென்றது மட்டுமல்லாமல், அவர்கள் ஒன்றாகக் கழித்த நாட்களின் நினைவுகளால் தானே செய்த பரிசையும் கொடுத்து மகியை நெகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்தார்.
அந்த சில நாட்களில் அதிக நேரம் வீஜேயுடன் செலவிட்டாள் மகி, இருவருமே தங்கள் காதலின் வசந்த காலமாக உணர்ந்தார்கள் அந்த நாட்களை.
ஆனால், பின்னால் வரப்போகும் கோடை காலத்தை வீஜே அப்போது அறியவில்லை.
வீஜே, மகி தன் தாயுடன் வெளிநாட்டிற்கு நிரந்தரமாக குடிபெயர்வதாக அப்போது நினைக்கவில்லை.
மகி வெளிநாடு சென்றதிலிருந்தே வீஜேயுடன் பேசுவது குறைந்தது.
ஒருநாள் மகி வீஜேயிடம், கல்யாணம் செய்து கொள்வது தனக்கு சரியாக வராது என்றும், அது தன் லட்சியத்திற்கு தடையாக இருக்கும் என்று கூறியபோது வீஜே அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
அதற்கு நிச்சயம் தங்களால் இணைந்து தீர்வு காணமுடியும் என்றும், அதற்காக பிரிய வேண்டிய அவசியமில்லை என்றும் வாதாடினார்.
வீஜே ஒருபுறம் மகியின் எண்ணத்தை எப்படியாவது மாற்ற முடியும் என்று நம்பிக்கொண்டிருக்க, மகியோ தன் நிலையில் உறுதியாக இருந்தது மட்டுமின்றி, வீஜேயுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதைத் தவிர்த்துவிடவே, சோசியல் மீடியா ஒன்றைத் தவிர அவர்களுக்கு நடுவில் வேறெந்த தொடர்பும் இல்லாமல் போனது.
தன் வேலையில் அடுத்தடுத்த இலக்கை நோக்கி ஓடுவதில் முனைப்பாக வருடங்களைத் தொலைத்த வீஜே, மகியும் அப்படித்தான் இருக்கவேண்டும் என்று நினைத்தாலும், அவர் தன்னை தொடர்பு கொள்ளாததும், சோசியல் மீடியாவிலும் ஆக்டிவ்வாக இல்லாததும் மனதின் ஒரு மூலையில் அரித்துக் கொண்டிருந்தது.
வீட்டில் கல்யாணத்தைப் பற்றி பேச்சை எடுத்தபோது, தான் மகியை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதையும் ஆனால் தற்போது அவரிடம் நேரடியாகத் தொடர்பிலில்லை என்பதை மட்டும் வீஜே சொன்னதற்கே எல்லாரும் அதிர்ந்துபோனார்கள்.
ஆனாலும் வீஜே உறுதியாக, அலுவலகத்தில் தக்க சமயம் பார்த்து பிரேக் எடுத்துச்சென்று தன்னால் இந்த விஷயத்தை நல்லபடியாக முடிக்கமுடியும் என்று சொன்னார்.
அதற்கு முன், தன் நட்பு வட்டத்தில் மகி தற்போது வேலை செய்யும் நிறுவனம், இடம் பற்றிய தகவல்களை உறுதி செய்துகொள்ள முற்பட்டபோது, உணர்வுப்பூர்வமாக அது அத்தனை சுலபமானதாக இருக்கவில்லை.
ஏனென்றால், நண்பர்கள் முந்திக்கொண்டு மகியைப் பற்றி வீஜேயிடம் கேட்டனர்.
தன்னையுமறியாமல் லேசான ஒரு பதட்டம் வீஜேவைத் தொற்றிக்கொள்ள ஆரம்பித்தது.
தீவிரமான தேடுதலுக்குப் பிறகு, மகியின் புதிய அலுவலகம் சம்பந்தப்பட்ட வேறொரு சோசியல் மீடியா ப்ரோஃபைல் மூலம், வசிக்கும் இடம், வேலை செய்யும் நிறுவனம் பற்றிய தகவல்களை வைத்து ஒரு வழியாக மகியை தொடர்பு கொள்ளும் வழியையும் கண்டுபிடித்தார் வீஜே.
பரபரப்புடன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மகியை போனில் தொடர்பு கொள்ள முனைந்த அந்த நிமிடம், தன் வாழ்நாளில் அதுவரை அனுபவித்திராத டென்ஷனில் இதயம் திக்திக் என்று அடிப்பது அவர் காதுகளில் தெளிவாகக் கேட்டது.
மறுமுனையில், மகியின் குரல் கேட்டபோது இனம்புரியாத உணர்ச்சியில் புல்லரித்தது.
இரண்டு ஹலோ சொன்னபிறகு, ஹாய் மகி என்ற வீஜேயின் குரலை அடையாளம் கண்டுகொண்டு ஹாய் வீஜே என்று பதிலளித்த மகியின் குரலில் ஆச்சர்யமும் அதே சமயம் தான் அந்த தருணத்தை எதிர்பார்த்திருந்தது போன்றும் ஒரு தொனி இருப்பதாக பிரம்மை ஏற்பட்டது வீஜேவிற்கு.
அதற்குப்பிறகு இயல்பான சந்தோஷத்துடன் மகி வீஜேயின் நலம் விசாரித்து, முதலில் அலுவலகம் தொடர்பான விஷயங்களை கேட்க ஆரம்பித்த போது, சிறிது ஏமாற்றம் ஏற்பட்டாலும் பொறுமையாக, மகியே பெர்சனல் விஷயம் பற்றி பேச்செடுக்கக் காத்திருந்தார் வீஜே.
அப்புறம் பெர்சனல் வாழ்க்கையில் என்ன விசேஷம்? என்று ஒரு வழியாக மகி கேட்க, என்ன இருக்கும் என்று நீ நினைத்தாய்? என்று திடீரென ஏற்பட்ட ஒரு ஜாக்கிரதை உணர்வுடன் எதிர் கேள்வி கேட்டார் வீஜே.
கல்யாணம் குறித்து உன் திட்டம் பற்றி எனக்கு தெரியவில்லை, அதனால்தான் கேட்டேன் என்றார் மகி.
ஹூம்! நீ சொல்வது சரிதான், முதலில் நீ உன் பெர்சனல் வாழ்க்கை பற்றி சொல் என்றார் வீஜே, சற்று சிந்தனையுடன்.
நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.
என் கரீயரின் உச்சத்தில் சரியான திசையில் போய்க்கொண்டு இருக்கிறேன்.
அதனால நாம் கடைசியாகப் பேசியபோது உன்னிடம் சொன்னதுபோல கல்யாணம் எனக்கு சரியாக வராது, என்று இயல்பான குரலில் சொன்னபோது, வீஜே சோர்ந்து போனார்.
இப்போது நீ சொல்லு, உன்னோட பெர்சனல் லைப், கல்யாணம் பற்றி என்றார் தொடர்ந்து.
கல்யாணம் பண்ணிக்கொள்ள முடிவெடுத்தவுடன், நம்பிக்கையுடன் உன்னை தேடிக் கண்டுபிடித்து, இப்போது ஏமாற்றத்தை ஜீரணிக்க முயற்சி பண்ணிக்கொண்டு இருக்கிறேன், என்றார் வீஜே.
சாரி வீஜே, இதை நாம் ஏற்கெனவே பேசிவிட்டோம் என்று மகி முடிக்குமுன், ஆனால் நான் அதை ஏற்றுக்கொள்ளவே இல்லையே, இதற்கு தீர்வு நம்மால் தேடமுடியும், அதைப் பற்றி பேசவேண்டும் என்றுதானே சொன்னேன், என்று குறுக்கிட்டார் வீஜே.
என் முடிவில் நான் உறுதியாக இருக்கிறேன்.
நான் உன்னிடம் தொடர்பிலில்லாது போனதற்கு அதுவும் ஒரு காரணம்.
நீயும் என்னைத் தாண்டி வேறு சரியான முடிவை எடுக்க இந்த இடைவெளி உதவியிருக்கும் என்று நம்பினேன், என்றார் மகி கவலையுடன்.
கல்யாணாம் பண்ணிக்கிட்டவங்க எல்லாருமே இலட்சியத்தை விட்டார்கள் என்றில்லையே.
ஒருவருக்கொருவர் புரிதலுடன் விட்டுக்கொடுத்துப் போவது சாத்தியம் இல்லையா என்ன? என்றார் வீஜே ஆற்றாமையுடன்.
இருவேறு திசையில் இலட்சியம் கொண்ட நாமிருவரும் காதலிக்க நேர்ந்ததுதான் இந்த சிக்கலுக்கு காரணம் வீஜே.
காதலிப்பதற்கு எந்த தடையுமில்லை, ஆனால் திருமண வாழ்க்கைக்கு குறைந்தபட்ச தேவைகள் உண்டு.
நிதானமா யோசிச்சு பார்த்தா இதை நான் விளக்க வேண்டியதில்லை உனக்கு, என்றார் மகி தீர்மானமான குரலில்.
நம்மைப் பற்றிய கனவுகள் பொய்யாகப் போவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, என்றார் வீஜே பிடிவாதமாக.
சரி, நாம் கல்யாணம் பண்ணிக்கொண்டால் இலட்சியத்தை விட்டுக்கொடுக்காமல் வாழ முடியுமா, அல்லது லட்சியத்தை காப்பற்ற நினைத்தால் அந்த கல்யாண வாழ்வில் நியாயம் இருக்குமா சொல் வீஜே, என்று கேட்டார் மகி தன் பிடியை விடாமல்.
நாம் நேரில் சந்தித்து பேசுவதுதான் சரியாக இருக்கும், நானே வருகிறேன், இல்லாவிட்டால் இந்த முடிவை என்னால் ஏற்க முடியும் என்று தோன்றவில்லை, என்றார் வீஜே கடைசி ஆயுதமாக.
மகி அதற்கும் அசராமல், வீஜே உன்னை நேரில் பார்த்தாலும், பார்க்காவிட்டாலும் என் காதலில் எந்த மாற்றமும் இல்லை அதேபோலத்தான் என் முடிவிலும். அதனால் மேலும் சிக்கல்தான் அதிகரிக்கும் என்று அஞ்சுகிறேன், என்றார்.
நேரில் சந்திப்பதைப் பற்றி யோசித்து முடிவு செய்யலாம் என்று வீஜே பேச்சை முடித்தார்.
அதற்கு பிறகு வந்த நாட்களில் மீண்டும் மீண்டும் பேசியும், யோசித்தும் நேரில் சந்திப்பதில் பயனில்லை என்று தோன்றவே, இருவரும் மற்றவர் முடிவை ஏற்றுக்கொள்ளத் தன்னை தயார் பண்ணிக்கொள்ளும் அதே நேரத்தில், அடுத்தவர் முடிவு மாறதா என்ற சிறு நப்பாசையுடன் நாட்களை கடத்தினர்.
இந்த நிலை வீட்டில் உள்ளவர்கள் கவலையை அதிகரித்து வீஜேயை இக்கட்டான நிலைக்குத் தள்ளியது. மகிக்கு அதுபோன்ற கவலை என்றுமே இருந்ததில்லை.
மகியின் அம்மா ஒற்றை பெற்றோராக இருந்ததாலும், மகியின் எண்ணங்கள் பெரும்பாலும் அவர் தாயின் பிரதிபலிப்பாக இருந்ததாலும், மகியின் முடிவுகளை அவர் அம்மா என்றுமே மாற்ற முனைந்ததில்லை.
வீஜேயின் வீட்டில் நம்பிக்கையிழந்து வேறு பெண் பார்க்கும் முயற்சியில் இறங்கிவிட்டாலும், வீஜே முழுவதுமாக ஈடுபாடு காட்டாததால், அதில் தடங்கல் ஏற்பட்டது.
மேலும், தான் காதலித்த விஷயத்தைப் பற்றி கூறி அதை பெண் வீட்டில் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் மட்டுமே மேற்கொண்டு பேசவேண்டும் என்று கண்டிஷன் போட்டுவிட்டதால், இன்னும் சில காலம் வீணாய்க் கழிந்தது.
மெல்ல இது ஒரு முடிவுக்கு வரும் என்று தோன்றியபோது, அந்த எண்ணத்தில் இடி விழுந்தது போல, சோசியல் மீடியாவில் வீஜேயின் நட்பு வட்டாரத்தில் ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டது.
அதில் மகியுடன் ஒரு சிறுமி, அவளை மகியின் மகள் என்று குறிப்பிட்டிருந்தது.
அதிர்ச்சியுடன் வீஜே மகியைத் தொடர்பு கொள்ள முயல, அதற்குள் அந்த புகைப்படம் நீக்கப்பட்டது. உடனே மகியுடன் பேசுமுன் சம்பந்தப்பட்ட அந்த நண்பருடன் பேசுவதுதான் சரி என்று வீஜே அந்த நண்பரைத் தொடர்புகொள்ள, அவரும் தயக்கத்துடன் அந்த சிறுமி மகியின் மகள் தான் என்றும் ஆனால், இந்த விஷயம் வீஜேவிற்கு தெரியாது என்பது தனக்கு தெரியாது என்றும், மகிதான் அந்த புகைப்படத்தை நீக்குமாறு கேட்டுக்கொண்டதாகக் கூறினார்.
அந்த நண்பரை வற்புறுத்தி அந்த புகைப்படத்தினை வாங்கிய வீஜே, அதை திரும்பத் திரும்ப பார்த்தபோது, அந்த சிறுமி தத்தெடுக்கப்பட்டவளாக இருக்கமுடியாது என்று மட்டும் நிச்சயமாகப் புத்தியில் உறைத்தது. அவ்வளவுதான், ஒரு கணம் கூட தாமதிக்காமல் மகியை நேரில் சென்று பார்த்துவிடக் கிளம்பினார் வீஜே.
அவர் பெற்றோர் தடுத்தபோது, கண்டிப்பாக தீர்வுடன் திரும்பி வருவதாக அவர்களுக்கு உறுதி கூறிவிட்டு கிளம்பினார்.
அந்த விமானப்பயணத்தின் ஒவ்வொரு கணமும் தன் மனதின் கனத்தை கூட்டுவதாகவே உணர்ந்தார்.
அதனால் மகியின் அலுவலக நேரத்தைப் பொருட்படுத்தாமல் நேரே அவர் முன்னால் சென்று நிற்க, இதை சற்றும் எதிர்பாராத மகி தடுமாறுவதை முதன்முதலாக வீஜே பார்க்க நேர்ந்தது.
ஏன் இப்படி செய்தாய்? என்பதைத்தாண்டி வார்த்தைகள் வர மறுத்தது வீஜேவிற்கு.
நான் சொல்கிறேன், என்று மட்டும் கூறிய மகி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள வீஜேவை காபி ஷாப்பிற்கு அழைத்துச் சென்றார்.
சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டு மகி, சாரி வீஜே, இதை உன்னிடம் மறைப்பது என் நோக்கமல்ல.
அதே நேரத்தில், இந்த விஷயம் எந்த விதத்திலும் நம் காதலைப் பொய்யாக்கவோ அல்லது கல்யாணம் பற்றிய என் முடிவை மாற்றவோ முடியாது என்றார்.
வீஜே நேரே மகியின் கண்களை பார்த்து, உன் மகளின் தந்தை பற்றி எனக்கு தெரிய வேண்டும், அதற்கு எனக்கு உரிமை இருப்பதாக நான் நினைக்கிறேன் என்றார்.
அவரே தொடர்ந்து, நீ பொய் சொல்லி என்னை அவமதிக்க மாட்டாய் என்று இப்போதும் நம்புகிறேன் என்றார்.
மகி அந்த கடைசி வாக்கியத்தில் எமோஷனலாகி, நமக்கிருக்கும் எல்லா உரிமைகளையும் எல்லா தருணங்களிலும் பெற்றுவிட முடிவதில்லை வீஜே, அதுபோல இந்த ஒரு விஷயத்தில் என்னை வற்புறுத்த வேண்டாம் பிளீஸ், என்றார்.
வீஜே விரக்தியாக வேறு பக்கம் பார்க்க, பிளீஸ் என்று மீண்டும் டேபிள் மேலிருந்த வீஜேயின் கையை பற்றி மகி கூற, கோபமாக தன் கையை உதறிவிட்டு, இப்போது நம் காதலுக்காக நான் இங்கே வரவில்லை.
பெர்சனல் வாழ்க்கையில் என் வழியில் நான் முழுமனதுடன் செல்ல இந்த உண்மை எனக்கு தெரிவது அவசியம் என்றார்.
அதை நான் கூற விரும்பவில்லை என்றால் நீ கட்டாயப்படுத்த முடியாது வீஜே பிளீஸ், இதை இப்படியே விட்டுவிடுவதுதான் நமக்கு நல்லது, என்றார் மகி துடிப்புடன்.
டென்ஷன் மிக அதிகமாகி, பேச முடியாமல் வீஜே தவித்தது மகிக்கு மிகுந்த வேதனையை அளித்தாலும், அந்த உண்மையை சொல்ல துணிவு வராமல் தடுமாறினார்.
இல்லாவிட்டால் நான் உன் மகளைப் பார்க்கவேண்டும், இதையும் நீ மறுத்தால் என் வாழ்க்கை வெறுமையாகப் போவதற்கு நீ மட்டுமே முழுப் பொறுப்பாவாய், என்றார் வீஜே வெறுப்பின் உச்சத்தில்.
அதை எதிர்கொள்ள முடியாமல், மகி தன் கைபேசியில் வந்த அழைப்பை சாக்காக வைத்து தான் செல்லவேண்டும் என்று கூறி எழுந்து கொண்டார்.
வீஜே மகியை தீர்க்கமாகப் பார்த்து, நான் இதைப்பற்றி தெரிந்துகொள்ளாமல் கிளம்பப்போவதில்லை என்று கூறிவிட்டு தான் தங்கியிருக்கும் ஹோட்டல், அறை விவரங்களைக் கூறிவிட்டு பதிலுக்கு காத்திராமல் சென்றுவிட்டார்.
மகி மேலிட்ட குற்ற உணர்ச்சியை வலிய உதற முயற்சித்தார்.
அடுத்த இரு தினங்களும், வீஜே மகியின் அலுவலகத்திற்கு வந்து அவர் பதிலுக்காக மௌனமாக காத்திருந்தார்.
விஷயத்தின் வீரியம் உறைக்கவே, மகி மறுநாள் வார விடுமுறை நாளில் தன் மகளுடன் விளையாடச் செல்லும் பார்க்கில் வீஜேவை சந்திப்பதாகச் சொல்லிவிட்டுச் சென்றார்.
இவ்வளவுக்குப் பிறகும் மகி தன்னை வீட்டிற்கு அழைக்காதது மிகுந்த கசப்பை உண்டாக்கியபோதிலும், அந்த சிறுமியை நேரில் காணவேண்டும் என்ற ஆவலில் பொறுமை காத்தார் வீஜே.
அந்த சிறுமியின் புகைப்படத்தை மீண்டும் மீண்டும் பார்த்தபோது தன் உள்ளுணர்வில் ஏதோ இடறலாக உணர்ந்த வீஜேவிற்கு, காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாகத் தோன்றியது.
டைம்ஜோன் மாறுபாட்டினால் தூக்கம் வந்தாலும் உள்ளுணர்வு எச்சரித்து எழுப்ப, சொன்ன நேரத்திற்கு முன்பாகவே வீஜே அந்தப் பார்க்கை அடைந்தார்.
மகி ஏற்கெனவே அங்கே இருந்ததைப் பார்த்தவுடனே வீஜேயின் கண்கள் அந்த சிறுமியை ஆவலுடன் தேடியது.
மகி வீஜேவின் அருகில் வந்து, அதோ அங்கே விளையாடிட்டு இருக்கா பாரு என்று தூரத்தில் அடையாளம் காட்டி விட்டு, அருகேயிருந்த இருக்கையில் அமர்ந்தார்.
மகியின் மனதிற்குள் ஏதோ ஒரு பிரார்த்தனை ஓடிக்கொண்டிருந்ததை அவர் கண்களில் வீஜே கவனிக்கவில்லை, அவர் அந்த சிறுமியையே வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி நின்றிருந்தார்.
சிறிது நேரம் கழித்து அந்த சிறுமி ஓடிவந்து மகியிடம் தண்ணீர் கேட்க, அதற்காகவே காத்திருந்த வீஜே அவளின் அருகே சென்று குனிந்து, ஹலோ என்றார் ஸ்னேகமான புன்னகையுடன்.
அவள் திரும்பி தன் அம்மாவைப் பார்க்க, ஹலோ சொல்லு என்று ஆங்கிலத்தில் மகளிடம் கூறினார் மகி.
உடனே, ஹலோ அங்கிள்! என்று அழகிய குரலில் கூறிய சிறுமியின் கையை பற்றி குலுக்கியபோது, அந்த பிஞ்சு ஸ்பரிசத்தில் அவர் உடல் சிலிர்த்ததை கவனித்தபோது மகியின் மனம் இளகியது.
ஹலோ டியர், உன் பேரென்ன, என்ன படிக்கிற, என்ன வயசு, உன் பிறந்த நாள் எப்போது என்று வரிசையாக ஆங்கிலத்தில் அந்த குழந்தையிடம் கேட்டார் வீஜே.
மகி சுதாரிப்பதற்குள் விசாரிப்பு முடிந்து, வீஜேவிற்கு தேவையான பதில் கிடைத்துவிட்டது.
அப்படியே சரிந்து இருக்கையில் உட்கார்ந்து அந்த சிறுமியின் மேலிருந்த தன் கண்களை அகற்றமுடியாமல் பார்த்த வீஜேயின் கண்களில் கண்ணீர் திரையிட்டது.
அதற்குள், அந்த சிறுமி மீண்டும் விளையாடச் சென்றுவிட, மகியிடம் எப்படி உன்னால் எனக்கு இதை செய்ய முடிந்தது, என்று உடைந்த குரலில் கேட்டார்.
வீஜே பிளீஸ், இதைத்தான் நான் தவிர்க்க நினைத்தேன்.
இந்த குழந்தை விஷயம் முழுக்க முழுக்க என் முடிவு, இதில் உனக்கு எந்த பங்கும் நான் தர விரும்பவில்லை.
ஒரு பெண் குழந்தையைப் பெற்று வளர்க்க வேண்டும் என்பதும் என் இலட்சியத்தில் ஒன்று.
ஆனால், நாம் நெருங்கிப் பழகிய சில காலத்திலேயே எனக்கு நல்லா புரிந்த விஷயம் நாம் சேர்ந்து வாழ நினைத்தால், நம்மில் ஒருவர் கரீயர் இலட்சியத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் திருமண வாழ்க்கைக்கு நியாயம் செய்ய முடியாமல் நம் காதலே வற்றிப்போகும்.
இது இரண்டுக்குமே நான் தயாராக இல்லை.
அதனால் நான் இந்தியாவிலிருந்து கிளம்புமுன் கடைசியாக நீ என்னை சந்திக்க வந்தபோது, என் ஆசை நிறைவேற வாய்ப்பைத் தேடிக்கொண்டேன்.
அதை நீ உணராமலிருக்க பாதுகாப்பான நாட்கள் என்று சொல்லி உன்னை நம்பவைத்துவிட்டேன்.
இங்கே இத்தனை வருடம் எந்த குறையுமில்லாமல் அவளை வளர்த்தும் வருகிறேன்.
அதனால், இவள் என் மகள் மட்டுமே! என்று மகி முடிக்குமுன், வீஜே வெடித்தார்.
எப்படி என் மகளின் வாழ்க்கையில் என் பங்கை நீயாக முடிவெடுத்து உதற முடியும், அவள் என்னை அங்கிள் என்று கூப்பிடும் இந்த துரதிஷ்டமான நிலைமையை எனக்கு கொடுக்க எப்படி உன்னால் முடிந்தது, என்று பொது இடத்தில் வீஜே தன்னை மறந்து கத்தியதில் துணுக்குற்ற மகி, சன்னமான குரலில் ஆனால் ஆணித்தரமாக, என் மகளைப் பற்றிய முடிவில் உனக்கு எப்போதும் பங்கு இருக்கவில்லை.
என் ஆசைப்படி நம் சந்திப்பின்போது நிகழாமல் போயிருந்தாலும், நான் செயற்கையான முறையில் குழந்தை பெற்றுக்கொண்டுதான் இருப்பேன்.
என் மகளை நல்ல முறையில் தனியாக என்னால் வளர்க்க முடியும்.
அவளுக்கு தன் பயோலாஜிகல் அப்பாவின் உறவு தேவைப்பட்டால், உனக்கு ஆட்சேபனை இல்லையென்றால் மட்டுமே, நான் அவளை உன்னிடம் கூட்டிக்கொண்டு வருவேன்.
இப்போது உனக்கு இதில் எந்த மறுப்பும் இருக்காது என்று நினைக்கிறேன், என்று முடித்தார் மகி.
நோ வே! என்று ஆவேசமாக வீஜே ஆரம்பிக்கும்போது, ஏதோ வாக்குவாதம் நடப்பதை உணர்ந்து மகியிடம் ஓடி வந்த அந்த சிறுமி தன் தாயின் கையைப் பிடித்தவாறு மிரட்சியுடன் வீஜேவை பார்த்த அந்த அந்நியமான பார்வையில் ஊமையாகிப்போன வீஜே, அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் வீடு திரும்பினார் முடிவாக.
வீஜேயின் மனதில், தன் இலட்சியத்தை தியாகம் செய்துவிட்டு மகியுடன் சென்றிருந்தால் தன்னால் கடைசிவரை காதலுடன் இருந்திருக்க முடியுமா என்ற மகியின் கேள்விக்கு பதிலாக, தன் மகளின் வேற்றுப்பார்வையே மிஞ்சியிருந்தது.
பைரி இனப்பறவைக்கு சிறகுகளே வரமென்றால், கூடென்பது சிறைதானே!
#519
Current Rank
60,440
Points
Reader Points 440
Editor Points : 60,000
9 readers have supported this story
Ratings & Reviews 4.9 (9 Ratings)
Brindha Senthilkumar
திறமைகள் இருந்தும் திருமணம் என்ற பந்தத்தின் நியதியாய் கணவனுக்கு உட்பட்டே இருக்கவேண்டி தன்னைத் தொலைத்த தோழிகளுக்கு இந்த கதை ஒரு ஆறுதல்..
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை அடுத்த நொடி ஆச்சரியம் ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
boomapriya73
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10Points
20Points
30Points
40Points
50Points